சூடு பிடிக்கும் பெண்கள் ஐ.பி.எல்.,: ரூ. 951 கோடி வருமானம் | ஜனவரி 16, 2023

தினமலர்  தினமலர்
சூடு பிடிக்கும் பெண்கள் ஐ.பி.எல்.,: ரூ. 951 கோடி வருமானம் | ஜனவரி 16, 2023

மும்பை: பெண்கள் ஐ.பி.எல்., தொடருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதன் ஒளிபரப்பு உரிமத்தை ரூ. 951 கோடிக்கு ‘வயாகாம் 18’ நிறுவனம் தட்டிச் சென்றது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடரின் முதல் சீசன் வரும் மார்ச்சில் நடக்க உள்ளது. மொத்தம் ஐந்து அணிகள், 25 நாட்களில், 22 போட்டிகளில் பங்கேற்க உள்ளன. போட்டிகள் அனைத்தும் மும்பையில் நடத்தப்படும். அணிகளின் விபரம் வரும் ஜன. 25ல் அறிவிக்கப்பட உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளை தேர்வு செய்யும் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.

 

இந்நிலையில் பெண்கள் ஐ.பி.எல்., தொடருக்கான போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2023–27) நேரடி ஒளிபரப்பு செய்ய ‘டிவி’, ‘டிஜிட்டல்’ உரிமம் பெறுவதற்கான ஏலம் மும்பையில் நடந்தது. இதில் சோனி, டிஸ்னி ஸ்டார், வயாகாம் 18 உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. முடிவில், வயாகாம் 18 நிறுவனம், ரூ. 951 கோடிக்கு ‘டிவி’, ‘டிஜிட்டல்’ ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது. இதன்படி ஒரு போட்டிக்கு ரூ. 7.09 கோடி வழங்கவுள்ளது.

இதே வயாகாம் 18 நிறுவனம், கடந்த ஆண்டு  ஆண்கள் ஐ.பி.எல்., தொடருக்கான ‘டிஜிட்டல்’ ஒளிபரப்பு உரிமத்தை (2023–27) ரூ. 23,758 கோடிக்கு பெற்றிருந்தது. டிஸ்னி ஸ்டார் நிறுவனம், ‘டிவி’ உரிமத்தை ரூ. 23,575 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.

 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா கூறுகையில், ‘‘பெண்கள் ஐ.பி.எல்., தொடரை பிரபலப்படுத்துதில், போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இதற்கான ‘டிவி’, ‘டிஜிட்டல்’ உரிமத்தை ரூ. 951 கோடிக்கு பெற்ற ‘வயாகாம் 18’ நிறுவனத்திற்கு வாழ்த்துகள். விரைவில், இத்தொடரில் பங்கேற்கும் ஐந்து அணிகளின் விபரம் அறிவிக்கப்படும்,’’ என்றார்.

 

பி.சி.சி.ஐ., தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், ‘‘சமீபகாலமாக பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி கண்டு வருகிறது. சமீபத்தில் முடிந்த இந்தியா–ஆஸ்திரேலியா தொடர் மூலம் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் பிரபலமடைந்ததை காண முடிந்தது,’’ என்றார்.

மூலக்கதை